Sasikala Natarajan History





திருமதி. வி.கே.சசிகலா வரலாறு ♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤•♤


பூர்வீகமும், பிறப்பும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த திரு. சந்திரசேகர சாளுவரின் மகன் திரு.விவேகானந்த சாளுவர். இவர் ஒரு ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ வைத்தார். அப்போது எல்லாம், இங்கிலீஷ் மருந்துகள் விற்கும் ‘மெடிக்கல் ஷாப்’கள் அரிதிலும் அரிது. அதனால், திரு. விவேகானந்தன்அவர்கள் வைத்து நடத்திய, ‘இங்கிலீஷ் மருந்துக் கடை’ திருந்துறைப்பூண்டியில் பிரபலமானது. அந்தப் பிரபலம், விவேகானந்தன் அவர்களின் வீட்டோடும் ஒட்டிக்கொண்டது. ‘இங்கிலீஷ் மருந்துக் கடைக்காரர் வீடு’ என்று அவருடைய வீடும் அந்த ஊரில் பிரபலமானது. மிராசுதாரர் விவேகானந்த சாளுவர் -கிருஷ்ணவேணி தம்பதிகளுக்கு,

சுந்தரவதனம்,
வனிதாமணி,
விநோதகன்,
ஜெயராமன்,
சசிகலா,
திவாகரன் ....-என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர். இதில் 5-வது பிள்ளை சசிகலாதான், பின்னாளில் ஜெயலலிதாவின் உடன்பிறவாத் தோழியானவர்; தமிழக ஆட்சியதிகாரத்திலும், அ.தி.மு.க என்ற அரசியல் இயக்கத்திலும், நம்பர் 2-ஆக வலம்வந்தவர்.

இளவயது வாழ்க்கை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருத்துறைப்பூண்டியில் இருந்த விவேகானந்தன், பிள்ளைகளின் படிப்புக்காக மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தார். காரணம், மன்னார்குடியில்தான் அப்போது, ஆங்கிலேயேர்களால் நிறுவப்பட்ட ‘பின்லே’ போர்டு ஹை ஸ்கூல் இருந்தது. சசிகலா அந்தப் பள்ளியில்தான் படித்தார். பள்ளி நாட்களில் ஓட்டப்பந்தயங்களில் ஆர்வமுடன் கலந்து கொண்டு இருக்கிறார். சில பரிசுகளையும் வாங்கி உள்ளார். மாணவர் மன்றத்தில் பங்களித்துள்ளார். ஆனாலும் பத்தாம் வகுப்போடு சசிகலாவின் படிப்பை நிறுத்திவிட்டனர்.

திருமண வாழ்க்கை.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூன்று பாசக்கார அண்ணன்களின் செல்லத் தங்கையாக, சாதரண கனவுகளுடன் இளம் பெண்ணாக திருத்துறைப்பூண்டி வடக்குச் செட்டித் தெருவில் வலம் வந்து கொண்டிருந்தார் சசிகலா. அவரது வாழ்வை அதிகாரமையங்களுக்கு அருகில் கொண்டுவரக் காரணமாக அமைந்தது ‘விளார்’ என்ற ஊர். தஞ்சையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் இருந்த சிறு விவசாயி மருதப்ப மண்ணையார். அவருடைய மகன்,திரு.நடராஜன். 60-களின் காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் கொழுந்து விட்டெரிந்து, தீயாப் பரவிக் கொண்டிருந்த திராவிட இயக்கங்கள், நடராஜனிடம் தமிழ் ஆர்வத்தையும், அரசியல் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தது. தி.மு.க மாணவர் இயக்கங்களில் தன்னை இணைத்துக் கொண்டு நடராஜன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மாணவராக இருந்த நடராஜன், 1965-ம் ஆண்டு நடைபெற்ற, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். மொழிப்போராட்டத்தில் நடராஜனின் சமகாலத்தவர்கள்தான், தி.மு.க முதன்மைச் செயலர் துரைமுருகன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள். அப்போது, இந்தப் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்துச் சென்ற எல்.கணேசனின் ஆஸ்தான சீடராக நடராஜன் வலம்வந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, தி.மு.க ஆட்சியில் ஏ.பி.ஆர்.ஓ வேலைகளில் கருணாநிதி முன்னுரிமை கொடுத்தார். அந்தவகையில், ‘விளார்’ நடராஜனுக்கும், மக்கள் தொடர்புத் துறையில் உதவியாளர் வேலை கிடைத்தது. வேலை கிடைத்ததும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. 1970-ம் ஆண்டு நடராஜன்-சசிகலா திருமணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட தி.மு.க.வின் அன்றைய தளகர்த்தராக விளங்கிய, மன்னை நாராயணசாமி தலைமையில், தி.மு.க தலைவர் கருணாநிதி நடராஜன்-சசிகலா திருமணத்தை நடத்திவைத்தார். வரலாற்று விநோதம் இது!

வினோத் வீடியோ விஷனும், ஜெ. நட்பும்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1980-எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தார். அந்த நேரம், ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் ஒதுக்கி வைத்திருந்தார். கட்சிக்காரர்கள் யாரும் அவருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்தார். அந்தக் கட்டளை கட்சிக்காரர்களுக்கானது மட்டுமே. தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாகவும், முதலமைச்சராகவும் இருந்த எம்.ஜி.ஆரின் அந்தக் கட்டளையை சினிமா உலகமும் பின்பற்றத் தொடங்கியது. அதனால், ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தன. இதனால், சினிமா, எம்.ஜி.ஆர் என்ற இரண்டு விஷயங்களை மட்டுமே, தனக்கான ஆதார மையமாக வைத்திருந்த ஜெயலலிதாவின் உலகம் சுருங்கியது. ஆனால், அவர் முடங்கிவிடவில்லை. நாடகங்கள் போட்டார். நடித்துக் கொண்டிருந்தார். அதை யாரும் தடுக்கவில்லை. ஆனாலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக மிக சிரமமான காலகட்டமாகவே அது இருந்தது.அது கட்சியின் சீனியர்கள் சிலருக்கு ஜெயலலிதா மீது ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அந்த நேரம் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்த, முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திட்டமிட்டார். மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சிகளாக நிறைய நாடகங்களும் இடம்பெற்றன. ‘காவிரி தந்த கலைச் செல்வி’ என்ற நாடகத்தை நடத்தும் வாய்ப்பை ஜெயலலிதாவுக்குக் கொடுக்கலாம் என எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்ற சீனியர்கள் பரிந்துரைத்தனர். பெரும் தயக்கத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் ஒத்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் சம்மதத்தால், ஜெயலலிதாவும் உற்சாகமானார். மதுரையில் நடைபெற்ற நாடகத்தை ஜெயலலிதா சிறப்பாக நடத்தியதைப் பார்த்த எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா மீது இருந்த கோபம் தணிந்தது.

சினிமா வாழ்க்கையில் தன்னோடு இணைந்து பலகாலம், பயணித்த ஜெயலலிதாவுக்கு கட்சியிலும் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தார். அப்போது, எம்.ஜி.ஆர்-ன் உடல்நிலையும் கொஞ்சம் சரியில்லாமல் இருந்தது. ஒத்துக் கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எம்.ஜி.ஆரால் போக முடியாத சூழல் அடிக்கடி ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சிகளுக்கு வேறு சீனியர் தலைவர்களை அனுப்பினால், அதற்கான வரவேற்பு மிக மிக குறைவாகவே இருந்ததையும் எம்.ஜி.ஆர் உணர்ந்திருந்தார். இந்த வெற்றிடத்தை ஜெயலலிதாவை வைத்து நிரப்பலாம் என்று எம்.ஜி.ஆர் கணக்குப்போட்டார். கட்சியின் மற்ற சீனியர்களை தான் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு அனுப்பும்போது கூடும் கூட்டத்தைவிட ஜெயலலிதாவை அனுப்பினால் அதற்கு கூட்டம் அதிகம் கூடும் என்று அவர் கணித்தார். அது பொய்க்கவில்லை. இதையடுத்துத்தான், கடலூர் மஞ்சக்குப்பத்தில் 1982-ம் ஆண்டு, நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளர் என்று எம்.ஜி.ஆர் அறிவித்தார். அதோடு சத்துணவுத் திட்ட உயர் மட்டக்குழு உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதாவுக்கு அளித்தார். ஏனென்றால், சத்துணவுத் திட்டத்தை, தனது செல்லப் பிள்ளையாகவே எம்.ஜி.ஆர். கருதினார். அதோடு, நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியையும் ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் வழங்கினார். எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையான, சத்துணவுத் திட்டத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியை ஜெயலலிதா முதன்முதலில் கடலூரில் தொடங்கினார். அப்போது, கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர், பின்னாளில் ஆசிட் வீச்சுக்கு ஆளான சந்திரலேகா.

கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவுத் திட்ட நிகழ்ச்சி வெகுவாக கவனம் ஈர்த்தது. அதற்கு காரணம், அப்போது, கலெக்டர் சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன். அவர், முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்ததை சிறப்பாக செய்தியாக்கினார். தமிழகம் முழுவதும் திறமையாகக் கொண்டு சேர்த்திருந்தார். ஜெயலலிதா-சந்திரலேகா-நடராஜன் காம்பினேஷன் செய்த வேலை, எம்.ஜி.ஆரை மகிழ்ச்சி அடைய வைத்தது.

ஜெயலலிதா நாடாளுமன்ற மக்களவை எம்.பி-யாகவும் இருந்த ஜெயலலிதாவுக்கு சந்திரலேகாவை வைத்தே, அரசாங்க விதிகள் மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி சொல்லிக் கொடுக்க வைக்கலாம் என்று நினைத்த எம்.ஜி.ஆர் அவரை சென்னைக்கு மாற்றிக் கொண்டுவந்தார். அப்போது, சந்திரலேகாவிடம் பி.ஆர்.ஓ-வாக இருந்த நடராஜனும் சென்னைக்கு ・டிரான்ஸ்பர்・வாங்கிக் கொண்டார். நடராஜன், தன் மனைவி சசிகலாவுடன், ஆழ்வார்பேட்டையில் குடியேறினார். அவர் பி.ஆர்.ஓ என்பதால், புகைப்படக்காரர்கள், வீடியோ எடுப்பவர்களின் தொடர்பு அவருக்கு இருந்தது. புகைப்படம் எடுப்பது பழைய மெத்தட். ஆனால், வீடியோ எடுப்பது புதிய மெத்தட். இது போட்டியில்லாத தொழிலும் கூட. அதனால், ஒரு வீடியோ கடை ஒன்றை ஆரம்பித்தால், அரசு சம்பளத்தைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று கணக்குப்போட்டார். வீடியோ என்றால் என்ன, வீடியோ கேசட் என்றால் எப்படி இருக்கும்?・என்று தமிழகத்துக்கே தெரியாத காலத்தில், நடராஜன், ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் வீடியோ கடை ஆரம்பித்தார். 'வினோத் வீடியோ விஷன்' என்று அந்தக் கடைக்குப் பெயர். அது சசிகலாவின் அண்ணன் வினோதகனின் நியாபமாக இருக்கலாம் என்கின்றனர். சிலர், அந்தக் கடைக்குப் பெயரே ・சசி வீடியோ விஷன்・தான் என்கிறார்கள். அந்தக் கடையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சசிகலாவுடையது. அரசு நிகழ்ச்சிகளை வீடியோ எடுக்கும் வாய்ப்புக்களை நடராஜன், தனது தொடர்புகள் மூலம் பெற்று, அவற்றை தனக்குச் சொந்தமான வீடியோ கடை மூலமே செய்து கொடுத்தார்.

அதேநேரத்தில் சந்திரலோகவும் ஜெயலலிதாவுக்கு, நாடாளுமன்றம் தொடர்பான ஆவணங்கள் விதிமுறைகளைப் பற்றிக் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘நீங்கள் ஓய்வு நேரத்தை எப்படிக் கழிப்பீர்கள்? நீங்கள் போனபிறகு, எனக்குப் பொழுதே போவதில்லை・என்று ஜெயலலிதா சந்திரலேகாவிடம் குறைபட்டுள்ளார். நான் வீடியோ கேசட்டுகளில் படம் பார்ப்பேன். என்னுடைய துறையில் பி.ஆர்.ஓ-வாக இருந்த ஒருவர் வீடியோ கடையும் வைத்துள்ளார். அவரிடம்தான் நான் கேசட் வாங்குவேன். உங்களுக்கும் தரச் சொல்கிறேன் என்றார்.
உடனடியாக நடராஜன் மூலம் அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். நடராஜன், சசிகலாவிடம் ஆங்கிலப் படங்களின் வீடியோ கேசட்களை கொடுத்து போயஸ் கார்டனுக்கு அனுப்பினார். சசிகலாவின் போயஸ்கார்டன் பயணம் 1982-ம் ஆண்டு இப்படித்தான் தொடங்கியது.

அப்போது அ.தி.மு.கவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் சுற்றுப் பயணங்களை படமெடுத்துக் கொடுக்கும் வாய்ப்பு சசிகலாவின் வினோத் வீடியோ விஷனுக்குக் கிடைக்க, ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைத்தார் சசிகலா.
அதற்குப் பிறகு, மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார் சசிகலா. ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினரானபோது, அவரோடு தில்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார் சசிகலா.
ஆனால், தமிழக முதலமைச்சரும் ஜெயலலிதாவின் அரசியல் ஆசானுமாக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன் மறைந்த போது, கட்சி இரண்டாக உடைந்த சமயத்தில், சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் ஜெயலலிதாவிற்குப் பின்னால் அணி திரண்டனர். இதுவே, ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாற்றியது.

1991-இல் ஜெயலலிதா முதன் முறையாக தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சமயத்தில், அவருக்கு எல்லாமுமாக மாறியிருந்தார் சசிகலா. அப்போதிலிருந்து ஜெயலலிதா, அம்மாவாகவும் சசிகலா சின்னம்மாவாகவும் அழைக்கப்பட ஆரம்பித்தார்கள். ஜெயலலிதா எங்கு சென்றாலும் நிழலாகப் பின்தொடர்ந்தார் சசிகலா.

வரலாற்றில் இடம் பிடித்த நட்பு!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஜெயலலிதா மீதான சசிகலாவின் விசுவாசம் அப்பழுக்கற்றது; கேள்விகளுக்கு அப்பாற்பட்டது’. இதைச் சொல்வது கடினமாக இருக்கலாம்; கேட்பது எரிச்சலாக இருக்கலாம்; புரிந்துகொள்ள சிரமமாகத் தோன்றலாம். ஆனால், ஜெ. - சசி நட்பின் வரலாற்றில், இதை ஆணித்தரமாய் எடுத்துச்சொல்ல, ஓராயிரம் உதாரணங்கள் இருக்கின்றன. சசிகலாவின் விசுவாசத்தை ஜெயலலிதா மனதார உணர்ந்திருந்தார். சசிகலா, ஜெயலலிதாவுக்கு அதைச் சரியான சந்தர்ப்பங்களில் உணர்த்தி இருந்தார். இந்த உணர்வுக்கடத்தல்தான், ஜெயலலிதாவின் கடைசி மூச்சு, உடலைவிட்டுப் பிரியும்வரை, சசிகலாவைப் அவர் பக்கத்திலேயே வைத்திருக்கக் காரணம்.

34 ஆண்டுகளுக்கு முன், கடலூரில் ஜெ. - சசியின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்தச் சந்திப்பு, பார்த்தால் புன்னகைக்கும் அறிமுகமாக மாறியது; அந்த அறிமுகம், ஜெ. - சசி நட்பாக வளர்ந்தது; அந்த நட்பு, ‘சசிகலா என் உடன்பிறவா சகோதரி’ என்று ஜெயலலிதாவை அறிவிக்கத் தூண்டியது; அந்த அறிவிப்பே, “சசிகலாவைத் தவிர எனக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை” என்ற முடிவுக்கு, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவைத் தள்ளியது. கடலூரில் ஏற்பட்ட ஜெ. - சசி சந்திப்பின் வரலாறு, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் முடிவுக்கு வந்தது.

ஜெயலலிதாவின் வாழ்வில், கடினமான காலகட்டங்கள் உருவானபோது, சசிகலாவின் நட்பு, ஜெயலலிதாவுக்கு அரணாக நின்றது; எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின், ரத்தக்களறியாய் கிடந்த, அரசியல் களத்தின் துரத்தல்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அடைக்கலம் கொடுத்தது. வாழ்நாளின் இறுதிவரை அது ஜெயலலிதாவுக்கு ஆறுதல் அளித்தது. ஜெயலலிதாவின் நட்பு பொதுவில் அதிகமாய் தலைகாட்டாத சசிகலாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செய்யும் சக்தியைக் கொடுத்தது. கட்சியில் சசிகலாவுக்கு, ‘நிழல்’ தலைவராக வலம்வரும் வாய்ப்பையும் அது வழங்கியது.

●"வார்த்தை வித்தகர் வலம்புரிஜானின்
புகழாரம்! "•

வலம்புரிஜான், சசிகலா பற்றி ஒருமுறை குறிப்பிட்டபோது, “மொகலாய சாம்ராஜ்ஜியத்தில் மட்டும் சசிகலா இருந்திருந்தால், வெள்ளைக்காரனே இந்தியாவுக்குள் காலடி வைத்திருக்க முடியாது” என்றார். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சசிகலாவை இப்படிக் கணித்திருந்தார். தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இவை என்பதை காலம் நிரூபித்தது.

சேவல் சின்னத்தை தேர்வு செய்த சசிகலா!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அது 1989-ஆம் ஆண்டு, அண்ணா.தி.மு.க., ஜானகி அணி- ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகளாக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில்தான் ஜெயலலிதா முதன்முதலாக (போடி தொகுதியில்) போட்டியிட்டு வென்றார்.

அதன்பின் சில நெருக்கடிகளால் அரசியலிலிருந்தும், எம்.எல்.ஏ.,பதவியிலிருந்தும் விலக முடிவு செய்த ஜெ. அதை ஒரு ஒரு கடிதமாக எழுதினார். அந்தக்கடிதத்தை சபாநாயகருக்கும் அனுப்ப முடிவு செய்தார். ஜெயலலிதாவின் இந்த முடிவை அறிந்த சசிகலாவின் கணவர் நடராஜன் அவசரப்படவேண்டாம் என்று ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அந்தக்கடிதத்தை தன் வீட்டில் பத்திரப்படுத்தினார்.

அதன்பின் சில நாட்களில் நடராஜன் வீட்டில் நடந்த சோதனையில் அந்தக்கடிதம் போலீசார் கைகளில் சிக்கியது. அடுத்த நாள் வெளிவந்த நாளிதழ்களில் ஜெயலலிதா ராஜினாமா பற்றிய செய்தி வெளிவந்தது. இதையறிந்த ஜெயலலிதா வழ்க்கம்போல் இது கருணாநிதியின் சதி என்று கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாள் கூடிய சட்டமன்றத்திலும் இது எதிரொலித்தது. தொடர்ச்சியாக கலைஞர் பட்ஜெட் உரையை படித்தபோது, அண்ணா.தி.மு.க., உறுப்பினர்களால் அந்தபட்ஜெட் உரை பறிக்கப்பட்டு கிழிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது.

அன்று மட்டும் ஜெ.வின் ராஜினாமாவை நடராஜன் தடுக்காமல் விட்டுருந்தால், அப்போதே ஜெயலலிதா அரசியலிலிருந்தே ஒதுங்கியிருந்திருப்பார்.
அந்த வகையில், அரசியல்வானில் ஜெ., ஜொலித்தற்கு நடராஜனும் ஒரு காரணம்.

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஜோதிடர், காழியூர் நாராயணன். இவர்தான், 2016-வரை ஜெயலலிதாவின் அரசியல் செல்வாக்கை அசைக்க முடியாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்தவர் (1994-ல் வெளிவந்த தனது புத்தகத்திலேயே இதை வலம்புரிஜான் குறிப்பிட்டுள்ளார்).

தனது ஜாதகத்தின்படி வைணவத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால்தான், ஜெயலலிதா அடிக்கடி திருப்பதிக்குச் செல்ல ஆரம்பித்தார். கட்சிக்கு சின்னம் சேவலா? புறவா? என்று வந்தபோது, அதையும் திருப்பதி ஏழுமலையான் முன்பு சீட்டுக்குலுக்கிப்போட்டுத்தான் சசிகலா, சேவல் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தார்.

சசிகலாவுக்கு ஆஸ்தான ஜோதிடர், வடுகப்பட்டி தர்மராஜன். அவர், “ஒரு காலத்தில் சசிகலா, தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆகிவிடுவார்” என்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்திருந்தார். வடுகப்பட்டி தர்மராஜன் அன்று போட்ட புதிருக்கு பதில் கிடைக்கும் நேரம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது.

No comments: