மனைவி எப்படி இருக்க வேண்டும் ? How to be a wife?


மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது....

No comments: